[prisna-google-website-translator]

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட்..

– Advertisement –

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் பிரதான வாயில்

சேலம் மாவட்டத்தில் உதயமான மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட் (Modern Theaters Ltd) இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக நெடுஞ்சாலை துறை மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்பு நெடுஞ்சாலை துறை இடத்தில் உள்ளது என அமைச்சர் ஏ.வா.வேலு சொல்ல உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த பரபரப்பான நேரத்தில் இப்போது உள்ள இளைய தலைமுறையினர் மாடர்ன் தியேட்டர்ஸ் பற்றி தெரிந்து கொள்ள பெரும் ஆசையில் இருக்க இதோ மாடர்ன் தியேட்டர்ஸ் பற்றிய வரலாறு உங்களுக்காக.1935ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சேலத்தில் திருச்செங்கோடு இராமலிங்கம் சுந்தரம் (டிஆர்எஸ்) துவக்கிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம்.

தென் இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக் கூடம் இதுவே. சென்னை போன்ற பெரிய நகரங்களை விட்டு முதன் முதலாக சேலம் போன்ற வெளி நகரம் ஒன்றில் மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கப்பட்டது . மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படக் கூடம் ஒரு காலத்தில் ஆண்டுக்கு மூன்று படங்களையாவது உருவாக்கிக் கொண்டிருந்தது. முதன் முதலாக தென் இந்தியாவில் வண்ணப்படத்தைத் தயாரித்த பெருமையும் மாடர்ன் தியேட்டர்சுக்கு உண்டு. இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அரங்கில் 1982ஆம் ஆண்டுவரை 150க்கும் மேலான தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்த் திரைப்படங்களே.

இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான ‘திரௌபதி வஸ்திராபரணம்'(1934), ‘துருவன்'(1935), ‘நல்ல தங்காள்'(1935) ஆகிய படங்களில் பணி புரிந்தார். அக்காலத்தில் தமிழ்ப் படங்களுக்கு மும்பை, கொல்கத்தா போன்ற வட இந்திய நகரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. டி.ஆர். சுந்தரம் குழுவினரும் கொல்கத்தா நகரம் சென்று இரண்டு படங்களை எடுத்தார்கள். இவ்விரண்டு படங்களும் ஓரளவு நல்ல வருமானத்தைத் தந்தன. ஒவ்வொரு முறையும் கொல்கத்தா செல்ல வேண்டுமா என நினைத்த சுந்தரம், சேலத்தில் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க எண்ணினார். சேலம் ஏற்காடு மலையடிவாரத்தில் 10 ஏக்கர் நிலத்தை சுந்தரம் வாங்கினார். வளாகத்தினுள் நுழைந்தால், அங்கேயே முழுப்படத்தையும் தயாரிக்கக்கூடிய வசதிகள் அனைத்தும் இருக்கவேண்டும்” என்று நினைத்தார். படப்பிடிப்பு தளம், பாடல் பதிவு செய்வதற்கான அறை, கூடம், திரைப்படத்தை போட்டுப்பார்க்க ஒரு அரங்கம் என அனைத்து வசதிகளுடனும், 1935 இல் “மாடர்ன் தியேட்டர்ஸ்” நிறுவனம் உருவானது.

படப்பிடிப்பு குறிப்பிட்ட தியதியில் தொடங்கி, குறிப்பிட்ட தியதியில் முடியவேண்டும் என்பதில் சுந்தரம் கண்டிப்பாக இருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சுமார் 250 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். சுந்தரம் தமது நிறுவனத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல் படுத்தினார். நடிகைகள் உள்ள பகுதிக்கு, நடிகர்கள் போகக்கூடாது. கதை வசனம் முழுமையாகத் தயாரான பிறகுதான், நடிகர் நடிகைகள் யார் என்பது முடிவாகும். நன்றாக ஒத்திகை பார்த்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கும். இங்கு நடிக்க வந்த நடிகர்கள் கூட ஒரு தொழிலாளர்களைப் போல சரியான நேரத்துக்கு வருவது, கட்டுப்பாட்டோடு பணியாற்றுவது, வீண் வம்பு, விவகாரம் இவற்றில் ஈடுபடாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது என்று இருந்தார்கள். நடிகர், நடிகைகள் ஒப்பந்த முறையில் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். அங்கு சேர்ந்து அறிமுகமாகி, புகழ்பெற்ற நடிகராக விளங்கியவர்களில் எம்.ஆர்.இராதா, எஸ். வி. இரங்கராவ், அஞ்சலி தேவி இவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தன்னுடைய படங்கள், தொழில் நுட்பத்தில் சிறந்தவையாக அமைய வேண்டும் என்று சுந்தரம் விரும்பினார். ஜெர்மனியில் இருந்து ‘வாக்கர்’, ‘பேய்ஸ்’ என்ற இரண்டு ஒளிப்பதிவளர்களை வரவழைத்தார். இவர்கள் தந்திரக்காட்சிகள் எடுப்பதில் வல்லவர்கள். இவர்களிடம் பயிற்சி பெற்ற டபிள்யு.ஆர்.சுப்பாராவ், ஜே.ஜி.விஜயம் ஆகியோர், பிற்காலத்தில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்களாகத் திகழ்ந்தனர். படத்தில் நடிகர்_நடிகைகளின் பெயர்களையும், கலைஞர்களின் பெயர்களையும் காண்பிக்கும் முகப்புக் காட்சியில் படத்துக்குப்படம் புதுமையை சுந்தரம் புகுத்தினார். அதற்காக பெரும் பணம் செலவழித்தார்.அமெரிக்க இயக்குனரான எல்லிஸ் ஆர்.டங்கன், இவரது படங்களுக்கு இயக்குநராக அமைந்தார். ஆங்கிலம் பேசும் ஒரு அமெரிக்கர் தமிழில் படம் இயக்கியது அக்காலத்தில் ஓர் அதிசயமாகக் கருதப்பட்டது. டி.ஆர்.எஸ். தயாரிப்பில், எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களை வைத்து எல்லிஸ் ஆர்.டங்கன் 1950 இல் இயக்கிய படம் ‘மந்திரி குமாரி’. அதில் எம்.ஜி.இராமச்சந்திரனின் வாளெடுத்துப் போர் புரியும் அழகு மக்களால் இரசிக்கப்பட்டது. அந்தப் படத்தின் வசனங்கள் புதுமை, வேகம்,விறுவிறுப்பு கொண்டு சிறப்பாக விளங்கியது.

மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம்

படத்தயாரிப்பில் தீவிரமாக இறங்கிய சுந்தரம் தனது முதல் தயாரிப்பாக “சதி அகல்யா” என்ற படத்தை தயாரித்தார். பிற்காலத்தில் “கவர்ச்சிக் கன்னி”யாகத் திகழ்ந்த இலங்கைக் குயில் தவமணிதேவி தான் இந்தப்படத்தின் கதாநாயகியாவார்.1937-இல் வெளிவந்த இப்படம் நல்ல வெற்றி பெற்றது. தொடர்ந்து, “பத்மஜோதி” என்ற படத்தையும் “புரந்தரதாஸ்” என்ற கன்னடப் படத்தையும் தயாரித்தார். 1938இல், “பாலன்” என்ற மலையாளப் படத்தைத் தயாரித்தார். மலையாள மொழியின் முதல் பேசும் படம் இதுதான். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. பின்னர் சுந்தரம் தயாரித்த படம் “நாம தேவர்.” இது, தமிழில் வெளியான 100_வது படம் என்ற பெருமையைப் பெற்றது. 1938_ம் ஆண்டில் “மாயா மாயவன்” என்ற படத்தை சுந்தரம் தயாரித்தார். தமிழில் எடுக்கப்பட்ட முதல் சண்டைப்படம் இது. இதில், டி.கே.சம்பங்கி என்ற பிரபல நாடக நடிகர் கதாநாயகனாக நடித்தார். நொட்டானி என்பவர் இப்படத்தை இயக்கினார்.
1950-இல் எம். என். நம்பியார் நடித்து வெளியான துப்பறியும் கதை திகம்பர சாமியார், இந்நிறுவனம் எடுத்த முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகும்.

ஆர்.எஸ்.மனோகரை வைத்து கைதி கண்ணாயிரம் போன்ற படங்களையும் எடுத்தனர் . ஜெய்சங்கரை வைத்து பல 007 மாதிரியான துப்பறியும் படங்களையும் எடுத்திருக்கிறார். இவர்கள் எடுத்த மொத்த படங்களின் பட்டியல் அந்த நிறுவனத்தின் வாயிலில் பெரிய விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருந்தார்கள்.

இந்தியாவின் ஐந்து முன்னாள் முதலமைச்சர்களை தனது சம்பளப் பட்டியலில் கொண்டிருந்த தனிப்பெருமை கொண்ட நிறுவனம்.

1963 இல் டி. ஆர். சுந்தரம் காலமானார். இப்போது சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடம் சுந்தரம் கார்டன்ஸ் என்ற குடியிருப்புப் பகுதியாக மாறியிருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அரங்கின் நுழைவு வாயில் மட்டும் தற்போது நிலைபெற்றிருக்கிறது. இன்றைக்கும் சில படப்பிடிப்புக் குழுவினர் சேலம் மாடர்ன் தியேட்டர் வளாகத்தில் தனது முதல் படப்பிடிப்பைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply