யாரை ‘ஏமாற்றுகிறார்’ சந்தானம்? நம்பிக்கையாளர் குறித்து அவ்வளவு அலட்சியமா?


#image_title

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் காமெடி நடிகர் சந்தானம் நடிப்பில் தயாராகி உள்ளது ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. ஆர்யா தயாரித்திருக்கும் இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘கோவிந்தா கோவிந்தா’ பாடலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அது ஹிந்துக்களின் மனத்தைப் புண்படுத்தும் வகையில் எழுதப்பட்டு, காட்சிப்படுத்தப் பட்டுள்ள்தாகக் கூறி, உடனடியாக அந்தப் பாடலை நீக்கிவிட்டு, மன்னிப்பு கோர வேண்டும் என்று ஹிந்து இயக்கங்கள் புகார் தெரிவித்தன. 

முக்கியமாக, ‘கோவிந்தா கோவிந்தா கிசா 47’ பாடலுக்கு எதிராக, திருப்பதி பக்தர்கள், ஆந்திர மாநிலத்தின் ஜனசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தொடர்ந்து, படத்தில் பெருமாள் குறித்து வரும் பாடலை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பதி சென்றிருந்த அதிமுக., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஜனசேனா கட்சியினர் மனு அளித்தனர். 


தொட்ர்ந்து, டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட தயாரிப்பாளர் மீது திருமலை காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் அளித்தனர். மேலும் திருப்பதி நிர்வாகமும் தங்கள் ஆலய பாடலை கேலி கிண்டல் செய்யும் வகையில்  சினிமாவில் பயன்படுத்தியதற்கு மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. தமிழகத்திலும் வி.எச்.பி உள்ளிட்ட இந்து இயக்கங்கள் பலத்த எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். இந்நிலையில், அப்படத்தில் இடம் பெற்ற கிஸா 47 பாடலை படக்குழு நீக்கி, படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. 

முன்னதாக, இந்தப் பாடல் குறித்த சர்ச்சை ஏற்பட்ட நிலையில், சந்தானத்திடம் செய்தியாளர் , “கோவிந்தா கோவிந்தா பாடல் உண்மையில் கடவுளை கிண்டல் செய்து இருக்கிறதா ?” என்ற  கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த சந்தானம்,  “அது கிண்டல் கிடையாது. நிறைய பேர் நிறைய விஷயங்கள் சொல்வார்கள். பார்ப்பவர்கள் எல்லோரும் அவர்களுடைய கருத்தை சொல்வார்கள். இது சரி இல்லை அதை மாற்ற வேண்டும் என்பார்கள். அதை எல்லாவற்றையும் நாம் எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி வாழவும் முடியாது. நீதிமன்றம் என்ன சொல்கிறது? அதன் பிறகு சென்சார் சான்றிதழில் என்ன சொல்கிறார்கள்? அதில் சில விதிமுறைகளை வைத்திருப்பார்கள். அதை சொல்வதை மட்டும் தான் நாம் தமிழ் சினிமாவில் செய்ய முடியும். போறவங்க வர்றவங்க சொல்றதையெல்லாம்  நாம் செய்ய முடியாது. ஒரு சட்டம் என்றால் ஒரு கோர்ட். சினிமாவுக்கு சென்சார். இதைத் தவிர போறவங்க வர்றவங்க சொல்றத எல்லாம் செய்ய முடியாது” என்று அலட்சியமாக பதில் அளித்தார் சந்தானம். 

குறிப்பாக, அந்தப் பாடல் யுடியூப்பில் அப்படியே பதிவேற்றம் செய்யப் பட்டிருந்தது. அதில், ‘ஏமாற்றப்பட்ட’ என்ற பொருள் வரும் விதத்தில், ஒவ்வொரு வாக்கியத்துக்கும் இறுதியில் கோவிந்தா கோவிந்தா என்று திருப்பதி கோயிலில் அதே மெட்டு டியூனை பயன்படுத்தியிருந்தார்கள். அதைக் கேட்ட ஹிந்துக்கள் கடும் கோபமும் ஆத்திரமும்  கொண்டார்கள். இறைவனின் திருப்பெயரை, ஏமாற்றல் எனும் பொருளில் குத்தாட்டப் பாடலுக்கு பயன்படுத்திய சந்தானம் குழுவை சமூகத் தளங்களிலும் திட்டித் தீர்த்தார்கள். 

குறிப்பாக, ஒரு மதத்தினரின் நம்பிக்கையைக் கெடுக்கும் வகையில், உருவங்கள், பெயர்கள், சின்னங்கள் ஆகியவற்றைக் கேலி செய்வது தண்டனைக்குரிய குற்றம் எனும்  நிலையில், நகைச்சுவை எனும் சாக்கில் ஹிந்து மத அடையாளங்களை கேலி கிண்டல் செய்யும் ஈனத்தனம் தமிழக சினிமாக்களில் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. 

தெய்வத்தை இழிவுபடுத்தும் சினிமாக்கள் :!

முன்னர் ஹிந்து தெய்வங்களின் உருவங்களை முடிந்த வரை  இழிவுபடுத்தி வந்த சினிமாக்கள் இப்போது அடுத்த கட்டமாக தெய்வ நாமங்களையும் இழிவுபடுத்தி உள்ளன. 

‘ஸ்ரீ நிவாஸ கோவிந்தா!  ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா!’ என்னும் புகழ் பெற்ற மலையப்ப ஸ்வாமியின் நாமாவளியை  சினிமாவில் Party Song குத்துப் பாடலாகச் சேர்த்துள்ளனர். இதற்கு ஜனசேனா கட்சியினர் எதிர்ப்பு & புகார் தெரிவித்து, இந்தப் பாட்டை நீக்காவிட்டால் தமிழக மக்கள் பிரதிநிதிகளை திருப்பதியில் நுழைய விட மாட்டோம் என எச்சரித்துள்ளனர். 

இங்கே என்ன நடக்கும் என்றால், நம் தெய்வங்களின் உத்ஸவ வீடியோக்களுக்கு அந்த பார்ட்டி பாட்டை BGM ஆக இணைத்து வெளியிடுவார்கள் வஞ்சகர்கள். துப்பு கெட்டவர்கள் அதை வெக்கமே இல்லாமல் ஷேர் செய்து பெருமைப்படுவார்கள். சுரணையற்றவர்கள் அதற்கும் கும்பிடு போட்டு பரவசப்படுவார்கள் . 

காசையும், நேரத்தையும் வீணாக்கும்  இது போன்ற சினிமாக்களை எதிர்க்கும் வைராக்யம் ஆத்திக மக்களுக்கு வந்தால் தான், இப்படி ஹிந்து தெய்வங்களை  கொச்சைப் படுத்தும் சினிமா காட்சிகளில் நடிக்க நடிகர்களுக்கும் பயம் வரும்.  தன் நாட்டையும், தன் தெய்வத்தையும்  அசிங்கப் படுத்துபவர்களை ஆதரிப்பவர்கள்  மிகவும் ஆபத்தானவர்கள்.  – என்றெல்லாம் சமூகத் தளங்களிலும் கருத்துகள் பரவின. 



Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply