சினிமா ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிக்கும் படங்களில் சிறு வயது விஜயகாந்தாக குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தார்.
அதன்பின் நடிப்பே தனது குறிக்கோள் என முடிவெடுத்து அடம் பிடித்த விஜயை ‘நாளைய தீர்ப்பு’ படம் மூலம் ஹீரோ ஆக்கினார் எஸ்.ஏ.சி. ஆனால் அப்படம் தோல்வி. அதன்பின் கவர்ச்சி, மசாலா என கலக்கி ‘ரசிகன்’ படம் எடுத்தார். அப்படம் ஹிட். தொடர்ந்து அப்பா இயக்கத்தில் நடித்து வந்ததால் விமர்சனங்களை எதிர் கொண்டார் விஜய்.
அப்போதுதான் அவருக்கு விக்ரமனின் ‘பூவே உனக்காக’ படம் கிடைத்தது. அப்படம் விஜய்க்கு பல பெண் ரசிகைகளை பெற்றுக்கொடுத்ததோடு வெற்றிப்படமாகவும் அமைந்தது. அதன்பின் காதலுக்கு மரியாதை, ஷாஜகான்,யூத என பல காதல் கதைகளை நடித்து வெற்றி கதாநாயகனாக மாறினார் விஜய்.
சில படங்கள் தோல்வியில் முடிய, விஜய் அவ்வளவுதான் என திரையுலகினர் பேச ’திருமலை’ மூலம் தான் ஹிட் ஹீரோ என மீண்டும் நிரூபித்தார். அப்படமே அவரை மாஸ் ஹீரோவாக மாற்றியது. கில்லி திரைப்படம் அவரை வசூல் மன்னனாக மாற்றியது.
அதன்பின் சில சறுக்கல்களை பார்த்தாலும் துப்பாக்கி, கத்தி, மெர்சல், தெறி, பிகில் என மாஸ் ஹீரோவாக தன்னை உயர்த்திக்கொண்டு, வசூல் சக்ரவர்த்தியாகவும் மாறியுள்ளர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என இவரின் ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கிறார்கள்.
விஜய் சினிமாவிற்கு வந்து 28 வருடங்கள் முடிந்து விட்டது. எனவே, #28YearsOfBelovedVIJAY என்கிற ஹேஷ்டேக்கில் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இதை கொண்டாடி வருகின்றனர்.