சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில், சித்ரா, தனது தந்தையிடம் பேசிய ஆடியோ மூலம் அவரது கணவர் ஹேமநாத்தை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகை சித்ராவின் மொபைல் போனில் பதிவாகியிருந்த ஆடியோ பதிவுகள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை அடுத்து இந்த விவகாரத்தில் ஏதோ மறைக்க முயல்வது தெரியவந்தது.
சின்னத்திரை நடிகை சித்ரா, சென்னை பூந்தமல்லி அருகே நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த வாரம் தற்கொலை செய்து கெண்டார். அவரது தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்ட நசரத்பேட்டை காவல் துறையினர், அவருடன் தங்கி இருந்த அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்து பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர்.
பதிவுத் திருமணம் மட்டுமே செய்து கொண்டு, இன்னமும் பெரிய அளவில் திருமணம் செய்வதற்கான நாள் குறித்து காத்துக் கொண்டிருந்தார் சித்ரா. இவருக்கும், ஹேம்நாத்துக்கும் பதிவுத் திருமணம் ஆகி நான்கு மாதமே கடந்த நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால், ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது. சித்ரா தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ., ஹேம்நாத்தின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார். மேலும் ஹேம்நாத்திடமும் விசாரணை நடத்தவுள்ளார்.
இந்நிலையில் சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் போலீஸார், திடுக்கிடும் தகவல் ஒன்றைக் கூறியுள்ளனர். தன்னை தினந்தோறும் சந்தேகப்பட்டு மிகவும் கேவலமான வார்த்தைகளால் ஹேம்நாத் காயப் படுத்தி வருவதாக ஹேம்நாத்தின் தந்தையிடமும் சித்ரா புலம்பியுள்ளார். சித்ரா தற்கொலை செய்து கொண்ட நிலையில், சித்ராவின் மொபைல் போனில் இருந்த தகவல்களை ஹேம்நாத் அழித்துள்ளார். ஆனால் அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று ஹேம்நாத் தொடர்ந்து போலீஸாரிடம் கூறி வந்துள்ளார். இதனால், அவர் மீதான சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது.
எனவே சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் சித்ராவின் மொபைல் போனில் இருந்த ஆடியோ பதிவுகள், தொடர்பு எண்கள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டன. அவற்றில், ஹேம்நாத்தின் தந்தையுடன் சித்ரா பேசிய ஆடியோ பதிவும் கிடைத்துள்ளது.
அதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.