விரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு வர அவர் தயங்கி வந்தார்.

திடீரென இன்று காலை தன்னுடைய திருமண மண்டபத்தில் தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்தார். அதில், அரசியல் கட்சி அறிவித்தால் வெற்றி பெற முடியுமா? கொரோனா பரவலுக்கு மத்தியில் பாதுகாப்பாக பரப்புரை செய்வது எப்படி என்பது உள்ளிட்ட விஷயங்களை 2 மணி நேரம் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து அவர் ஜனவரியில் கட்சி துவங்குவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இது தொடர்பான அறிக்கையை அவர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ‘ஆலோசனை கூட்டத்தில் எங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். நான் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவதாக நிர்வாகிகள் கூறினர். எனது அரசியல் பிரவேசம் பற்றி விரைவில் அறிவிப்பேன்’ எனக்கூறிவிட்டு சென்றுவிட்டார்.